

மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சாலைகளில் மேலும் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாதர் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி பள்ளிக்கு சென்றதைக் காணமுடிந்தது.
பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகின்றன. ரெயில்கள் ரத்து, போக்குவரத்து மாற்றம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை பெய்து வரும் மும்பையில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது