

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கட்டலோனியா தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தது. அதற்கு 90 சதவிகித மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனிநாடு பிரகடனம் செய்தது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதந்திர கட்டலோனியா பிறந்து விட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டலோனியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும், கட்டலோனியா நிர்வாகம் ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் டிசம்பர் மாதம் 21-ம் தேதி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் கட்டலோனியா தலைவர் பியூங்டிமோண்ட் போட்டியிட வேண்டும் என ஸ்பெயின் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து அதை நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஸ்பெயின் அரசை எதிர்த்து அமைதியான வழியில் போராடுமாறு தனிநாடு ஆதரவாளர்களுக்கு பியூங்டிமோண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.