

சென்னை:
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக துணைவேந்தர் நியமித்த 5 பேர் கொண்ட விசாரணை குழுவை கவர்னர் கலைத்து விட்டு ஒரு அதிகாரி விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தமிழக அரசின் அதிகாரத்தில் கவர்னர் தலையிடும் போக்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தி.மு.க.வினர் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகையிட சென்றனர்.
‘பதவி விலகு பதவி விலகு’, ‘கவர்னரே பதவி விலகு’, ‘திரும்ப பெறு’, ‘திரும்பபெறு மத்திய அரசே கவர்னரை திரும்ப பெறு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
ஆனால் போலீசார் தி.மு.க.வினருக்கு அனுமதி கொடுக்காமல் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே பேரணியை தடுத்து நிறுத்தினார்கள்.
உடனே தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே போலீசார் மா.சுப்பிரமணியன் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தங்க வைத்தனர்.
அங்கு மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டத்தை மீறும் வகையில் அவரே மாவட்டந்தோறும் சென்று ஆய்வு நடத்துகிறார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டி வந்தோம். ஆனாலும் அவர் தொடர்ந்து தன்னிச்சையாக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் நோக்கில் தொலைபேசியில் பேசி இருக்கிறார். இதில் கவர்னர் பெயரை உச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் துணைவேந்தர் நியமித்த விசாரணை குழுவை கலைத்து விட்டு அவரே தன்னிச்சையாக ஒரு அதிகாரியை நியமிக்கிறார்.
கவர்னர் மீதுதான் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவரே விசாரணை அதிகாரியை நியமிக்கிறார் என்றால் இது உண்மையை மூடி மறைக்க நடைபெறும் சம்பவமாகவே கருதுகிறோம்.
அது மட்டுமல்ல ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டுகிறார். தொடர்ந்து இழி செயலை தமிழகத்துக்கு ஏற்படுத்துகிறார்.
எனவே கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அவர் பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி இன்று முற்றுகை போராட்டம் நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மா.சுப்பிரமணியனுடன் எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், சைதை குணசேகரன், பாலவாக்கம் விசுவநாதன், பாலவாக்கம் சோமு, பெருங்குடி ரவி, வேளச் சேரி மணிமாறன், கிருஷ்ண மூர்த்தி, கே.கே.நகர் தனசேகரன், துரைராஜ், மகேஷ்குமார், இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்பட ஏராளமானோர் கைதானார்கள். #TNGovernor #DMK