குடிநீர் வினியோகம் செய்ய கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

முறையாக குடிநீர் வினியோகம் செய்ய கோரி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம் செய்ய கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர் கிராமத்தில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இரூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் தாங்களாகவே முன்வந்து இரண்டு கிணறுகளை வெட்டினர். அந்த கிணறுகளின் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி முறையாக குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இரண்டு கிணறுகளையும் ஆலத்தூர் தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலரின் கோரிக்கையின் படி ஆலத்தூர் ஊராட்சியிடம் ஒப்படைத்தனர். அப்போது இந்த 2 கிணறுகளின் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் இணைப்பு எக்காரணம் கொண்டும் துண்டிப்பு செய்யப்படாமல் குடிநீர் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால், தற்போது கடந்த 7 மாதமாக ஊராட்சி மூலம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மேலும் பொது குழாய் மூலம் குடிநீர் வழங்க வில்லை. அனைத்து தெருக்களிலும் சிமெண்டு சாலையை சேதப்படுத்தி குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சிமெண்டு சாலை சேதமாகி உள்ளது.

எனவே அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் வழங்காமலே வழங்கியதாக கணக்கு காட்டிய ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும். சேதப்படுத்தப்பட்ட சிமெண்டு சாலைகளை சீரமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், வட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் சீனிவாசன் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்காத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒரு வாரத்திற்குள் பழைய முறைபடியே குடிநீர் வினியோகம் செய்வதாகவும், ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்வதாகவும், சேதப்படுத்தப்பட்ட சிமெண்டு சாலையை சீரமைத்து தருவதாகவும் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com