

இஸ்லாமாபாத்:
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
ஈரான் வழியாக பாகிஸ்தானின் பலுசிஸ்தானுக்கு வந்து, உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியது. ஆனால் அதை மறுத்த இந்தியா, ஈரானில் இருந்து ஜாதவை கடத்தி வந்து கைது செய்ததாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது.
ஜாதவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ராணுவ மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இருப்பினும், இந்தியாவின் முறையீட்டின்பேரில், மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பல குழந்தைகள் உட்பட சுமார் 150 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அந்த தீவிரவாதியையும், குல்பூஷண் ஜாதவையும் பரஸ்பரம் மாற்றி கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அலோசகர் விருப்பம் தெரிவித்துள்ளார் என அவர் கூறினார். அந்த விசயம் குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.