

கே.கே.நகர்:
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நத்தமாங்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 27). கடந்த 2017-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் திருச்சி மாநகர ஆயுதப் படையில் பணியாற்றி வந்தார். அவர் கே.கே.நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்தபடி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நவநீதகிருஷ்ணன் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றார். நேற்று காலை அவர் பணியில் சேர்ந்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கவேண்டும். ஆனால் காலையில் அவர் பணிக்கு வரவில்லை.
இதனால் அவருடன் பணியாற்றும் சக போலீஸ்காரர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். வீட்டில் நவநீதகிருஷ்ணன் துப்பாக்கியை தோளில் சுமக்க பயன்படுத்தப்படும் பட்டை துணியின் மூலம் மின் விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியது தெரிந்தது.
இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கே.கே. நகர் போலீசார் அங்கு விரைந்து சென்று நவநீதகிருஷ்ணனின் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொந்த ஊரில் நவநீதகிருஷ்ணனின் வீட்டிற்கு செல்வதற்கான 3 அடி பாதையில் தாய்மாமன் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை பற்றி பேசி முடிவு செய்வதற்காக தான் நவநீதகிருஷ்ணன் மருத்துவ விடுப்பில் ஊருக்கு சென்று இருக்கிறார்.
ஆனால் அவரால் அந்த பிரச்சினையை பேசி தீர்க்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.