பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம்: அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு - 144 தடை உத்தரவு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் கடந்த 6-12-1992 அன்று இடித்து தகர்த்தனர். இதனால் விளைந்த மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட டிசம்பர் ஆறாம் தேதியை இஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாகவும், கருப்பு நாளாகவும் அனுசரித்து வருகின்றனர். நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வழக்கம்போல் கருப்பு தினம் அனுசரிக்கப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வரும் ஆறாம் தேதியை வீர தினமாக அனுசரிக்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி பகுதிக்குள் யாரும் நுழையாதபடி சுற்றிலும் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட போலீசாருக்கு உதவியாக 4 போலீஸ் உதவி சூப்பிரண்ட்டுகள், 19 துணை சூப்பிரண்ட்டுகள், 10 கம்பெனிகளை சேர்ந்த மத்திய துணை ராணுவ படையினர், 2 கம்பெனிகளை சேர்ந்த அதிரடி விரைவுப் படையினர், 400 கான்ஸ்டபிள்கள், மகளிர் கமாண்டோ படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தியா மற்றும் அருகாமையில் உள்ள பைஸாபாத் நகரங்களில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அயோத்தி நகருக்குள் புதிதாக நுழையும் வாகங்களை தணிக்கை செய்து, தடை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com