தஞ்சை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 23½ டன் விதை நெல் விற்க தடை

தஞ்சை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 23½ டன் விதை நெல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதை நெல்
விதை நெல்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் தஞ்சை மாவட்டங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி விதை ஆய்வு இணை இயக்குனர் மோகனசுந்தரம் தலைமையில் திருச்சி மாவட்ட துணை இயக்குனர் சரவணன், துணை இயக்குனர் பெரியகருப்பன் மற்றும் விதை ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விலை பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்போது விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக 25 விதை மாதிரிகள் எடுத்து தஞ்சை விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. ஆய்வில் விதைசட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.8 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 23.45 டன் விதைநெல் விற்க தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து மோகனசுந்தரம் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் சாகுபடிக்கு தேவையான குறுகிய கால ரகமான கோ 51, ஏ.எஸ்.டி.16, ஏ.டி.டி.36, 37, 43, 45, 53 ரக விதைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் தகுதி பெற்று சான்றட்டை பொருத்திய விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

விதை உரிமம் பெறாமல் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் விதை விற்பனையாளர்கள் விதை விற்பனை செய்ததற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com