பேராசிரியை விவகாரம் - பல்கலைக்கழக பதிவாளரிடம் அதிகாரி சந்தானம் விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான ஆடியோ பதிவை கேட்டு ஆய்வு செய்த அதிகாரி சந்தானம் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார்.
பேராசிரியை விவகாரம் - பல்கலைக்கழக பதிவாளரிடம் அதிகாரி சந்தானம் விசாரணை
Published on

மதுரை:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியலுக்கு அழைத்த விவகாரம் தமிழக உயர்கல்வி வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அருப்புக்கோட்டையில் முகாமிட்டு விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் கவர்னர் நியமனம் செய்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் இன்று தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளார்.

இதற்காக காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். அவரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா வரவேற்றார். விமான நிலையத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான புகார்கள் குறித்து இன்று அரசு சுற்றுலா மாளிகை மற்றும் பல்கலைக்கழகம் சென்று அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை சந்தித்து விசாரணை நடத்த உள்ளேன். பின்னர் இன்று மாலை அருப்புக்கோட்டை செல்கிறேன். நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் புகாரின் முகாந்திரம் குறித்து கிரிமினல் விசாரணை நடத்துவர். நான் நிர்மலா தேவி மீதான புகார் குறித்தும், பல்கலைக்கழக அதிகாரிகளின் தொடர்பு மற்றும் ஒழுங்கீனம் குறித்தும் விசாரணை நடத்த உள்ளேன். இதனால் இதில் எந்த முரண்பாடும் ஏற்படாது.

முதல் கட்டமாக வருகிற சனிக்கிழமை வரை 3 நாட்கள் மதுரையில் விசாரணை நடத்தப்படும். பின்னர் அடுத்த வாரம் மீண்டும் மதுரை வந்து 2-ம் கட்ட விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு விசாரணை அதிகாரி சந்தானம் கூறினார்.

இதையடுத்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த சந்தானம், அறை எண். 5-ல் தங்கினார். அங்கு பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான ஆடியோ பதிவை கேட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். மதியம் பல்கலைக்கழகம் சென்று துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் சிலரையும் அழைத்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நிருபர்கள் பேராசிரியை நிர்மலா தேவியை சிறையில் சந்தித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த வி‌ஷயத்தில் கவர்னர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்தப்படுமா என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த சந்தானம், கவர்னர் பெயரை யார் வேண்டுமானாலும் கூறலாம். அவரிடம் விசாரணை நடத்தும் யோசனை இதுவரை இல்லை.

நாளை அருப்புக்கோட்டை செல்ல உள்ளேன். சம்பந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்திவிட்டு, குறிப்பிட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். 3 நாட்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்துவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com