

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.
அதிகாரி சந்தானம் மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்.
அவருக்கு உதவியாக பேராசிரியைகள் கமலி, தியாகேசுவரி ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள்.
பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை விவரங்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது.
மதுரை சிறையில் நிர்மலா தேவியை சந்தித்து சுமார் 6 மணி நேரம் சந்தானம் விசாரணை நடத்தினார். அவர் அளித்த வாக்கு மூலங்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
மேலும் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி நிர்வாகத்தினர்-மாணவிகள் அளித்த வாக்குமூலங்களும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிர்மலாதேவியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. நாளையும் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
முருகன், கருப்பசாமியிடம் விசாரணை முடிந்ததும் சந்தானம் விசாரணை அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார்.
வருகிற 15-ந் தேதிக்குள் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்க சந்தானம் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால் நிர்மலா தேவியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு யார் காரணம்? என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AruppukottaiProfessor #NirmalaDevi