பேராசிரியை விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உயர் அதிகாரிகள் சிக்குவார்களா?

பேராசிரியை விவகாரம் - சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உயர் அதிகாரிகள் சிக்குவார்களா?

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வளையத்தில் உயர் அதிகாரிகள் சிக்குவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #AruppukottaiProfessor #NirmalaDevi
Published on

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருடனும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் உள்ள நிர்மலாதேவி வீடு, மதுரை ஒத்தக்கடையில் உள்ள பேராசிரியர் முருகனின் வீடுகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பல்கலைக்கழகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் நிர்மலாதேவி தொடர்பாக பல்வேறு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததாக தெரிகிறது.

நிர்மலாதேவி அளித்த பதிலும் இவர்கள் இருவர் கொடுத்த வாக்குமூலங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. இதனால் அடுத்தக்கட்ட விசாரணையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் காவலில் எடுத்து 3 பேரிடமும் விசாரணை நடத்துவதா? அல்லது இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோ பதிவில் உயர் அதிகாரிகள் மாணவிகளிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றும், இதற்கு சம்மதித்தால் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம் என்றும் ஆசைவலை விரித்தது தொடர்பாக மேல் விசாரணையை தொடங்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

இதனால் நிர்மலா தேவியை ஏவிய உயர் அதிகாரிகள் பட்டியலை போலீசார் தயார் செய்து அடுத்தக்கட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

விசாரணை வளையத்தில் சிக்கும் உயர் அதிகாரிகள் யார்-யார்? என்பது சி.பி.சி.ஐ.டி.யின் அடுத்த கட்ட நகர்வுகள் மூலமே அறியமுடியும் என்பதால் நிர்மலாதேவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனிடையே கவர்னர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழு இதுவரை 2 கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சந்தானம் விசாரணை நடத்தி உள்ளார். நிர்மலாதேவியுடன் தொடர்புடைய பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் குறித்து சந்தானத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை உயர் அதிகாரிகள் சந்தானம் குழுவால் விசாரிக்கப்படவில்லை.

இதனால் முக்கிய புள்ளிகள் தப்ப வாய்ப்பு இருப்பதாக பல்வேறு யூகங்கள் கிளப்பப்படுகின்றன. இந்த நிலையில் அதிகாரி சந்தானம் நாளை 3-வது கட்ட விசாரணையை மதுரையில் தொடங்குகிறார்.

அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் நேரில் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அறிக்கை சமர்ப்பிக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் சந்தானம் குழுவும் விசாரணை வரம்பை இதோடு நிறுத்திக் கொள்ளுமா? அல்லது உயர் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் சேர்ப்பார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. #AruppukottaiProfessor #NirmalaDevi

X

Maalai Malar
www.maalaimalar.com