கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பேராசிரியையிடம் 12 பவுன் நகை - செல்போன்கள் திருட்டு

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பேராசிரியையிடம் 12 பவுன் நகை, செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருட்டு குறித்து ரெயிலில் சோதனை நடத்திய போலீசார்
நகை திருட்டு குறித்து ரெயிலில் சோதனை நடத்திய போலீசார்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் ராமன் புதூர் ஹோலிகிராஸ் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கல் ராஜ் (வயது 60). இவர் பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பெனடிட்டா (59). ஓய்வு பெற்ற பேராசிரியை.

இவர்களது மகன் சென்னையில் வசிக்கிறார். அவரை பார்ப்பதற்காக பாஸ்கல்ராஜ் தம்பதியினர் சென்றிருந்தனர். பின்னர் நேற்று மாலை அவர்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு ஊர் திரும்பினர்.

ரெயிலில் அவர்கள் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தனர். இரவில் கணவன்-மனைவி 2 பேரும் அயர்ந்து தூங்கி விட்டனர். விருதுநகர் அருகே ரெயில் வந்தபோது பெனடிட்டா விழித்து பார்த்தார். அப்போது அவர் வைத்திருந்த கைப்பை மாயமாகி இருந்தது. அந்த பையில் 12 பவுன் தங்க நகையும், விலை உயர்ந்த 2 செல்போன்களும் வைத்திருந்தார்.

நகை மற்றும் செல்போன்கள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெனடிட்டா ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் செய்தார்.

போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரித்து பெனடிட்டாவின் கைப்பையை தேடினர். அப்போது அவரது கைப்பை மட்டும் ரெயில் கழிப்பறையில் கிடந்தது. அதில் இருந்த நகையும், செல்போனும் காணாமல் போய் இருந்தது. பெனடிட்டா தூங்கிய பிறகு அவரிடம் கைப்பையை பறித்த மர்ம நபர், அதில் இருந்த நகை, செல்போனை திருடி விட்டு கைப்பையை கழிவறையில் வீசிச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 5.45 மணிக்கு ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் நகை மாயமானது தொடர்பாக பாஸ்கல்ராஜ், அவரது மனைவி பெனடிட்டா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.

மேலும் அவர்கள் சந்தேகம் தெரிவித்த பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள் கொடுக்கும் ஒப்பந்த பணியாளர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டு நடந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த வடமாநிலத்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com