

மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வளநாடு பகுதியை சேர்ந்தவர் முகமது அனீபா. இவர் சென்னையில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் வள நாட்டில் வசித்து வந்தனர். அவ்வப்போது முகமது அனீபா வளநாட்டிற்கு வந்து செல்வார்.
நேற்று திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊருக்கு வந்திருந்தார். பின்னர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது.
மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8½பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வளநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தவே, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.
அதன்பிறகு கொள்ளை சம்பவங்கள் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது பேராசிரியர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.