

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க முடியாமல், பல தொலை தொடர்பு நிறுவனங்கள், பிற நிறுவனங்களுடன் இணைந்து சேவையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர்செல், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தன்னுடைய சேவையை வழங்குவதில் திக்குமுக்காடி வருகிறது. ஒரு கட்டத்தில் தனது நிறுவனத்தின் சேவையை ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களை ஏர்செல் நிறுவனம் சந்தித்தது. அதன் சேவை கடந்த 3 வாரங்களுக்கு மேல் முடங்கி கிடக்கிறது. அவ்வப்போது சேவை சீராகி வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் கிடைத்தாலும், ஏர்செல்லின் சேவை திருப்திகரமாக இல்லை. இதற்கிடையில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்கள் நிறுவனத்தை திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கக்கோரி, தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
அந்த மனு குறித்து ஆய்வு செய்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் சேவையை மாற்றுவதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏர்செல் நிறுவனத்தின் சேவை ஏப்ரல் 15-ந்தேதி முழுவதுமாக நிறுத்தப்பட உள்ளதாக ‘டிராய்’ (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அறிவித்துள்ளது. அதன்படி, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் நெட்வொர்க்கை மாற்றுவதற்காக, பிரத்தியேக குறியீடு எண் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த எண்ணை பெறுவதற்கு, PO-RT என ஆங்கிலத்தில் டைப் செய்து, அத்துடன் செல்போன் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பினால், பிரத்தியேக குறியீடு எண் கிடைக்கும். அந்த எண்ணுடன் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு செல்போன் ரீசார்ஜ் கடைகள், பிற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையத்துக்கு சென்று நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம். ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு இந்த சேவையை பெற இயலாது என்றும் ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 15-ந்தேதிக்கு முன்பு சேவையை மாற்றிவிடவேண்டும் என்று ரீசார்ஜ் கடைகளுக்கும், மற்ற தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையங்களுக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
சில இடங்களில் சிக்னல் விட்டு, விட்டு கிடைப்பதால் உரையாடலை முழுமையாக தொடர முடியாமல் மீண்டும், மீண்டும் அழைக்கும் நிலை உள்ளது. மேலும் பிரத்தியேக குறியீடு எண் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் தங்கள் விருப்பத்தின்படி மற்ற தொலைதொடர்பு சேவைக்கு மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பிரத்தியேக குறியீடு எண் கிடைத்தாலும், மற்ற நெட்வொர்க்கை தேர்வு செய்து மீண்டும் தங்களுடைய பழைய செல்போன் எண்ணுடன் சேவையை தொடருவதற்கு வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிக்னல் கிடைக்காமல் தொடர்புகொள்ள முடியாத சூழல் நிலவுவதால் வணிகம் செய்பவர்களுக்கு வியாபார இழப்பு ஏற்படுகிறது.
இதேபோல ஏதாவது ஒரு அவசரத்துக்கு ஒருவரை அழைக்க முயற்சிப்பவர்கள் சிக்னல் கிடைக்காததன் காரணமாக தொடர்புகொள்ள முடியாத சூழல் இருக்கிறது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வை ஏர்செல் நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்றும், மற்ற நெட்வொர்க்கை தேர்வு செய்ய விரும்புபவர்களை அந்தந்த தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அதற்கான வழிமுறைகளை ஏர்செல் நிறுவனம் செய்யவேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. #tamilnews