

புரோ கபடி போட்டியில் இந்த முறை தமிழகம் உள்ளிட்ட 4 அணிகள் புதிதாக இடம் பெற்று உள்ளன. இதில் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கபடி போட்டி இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது. தமிழக அணியின் உரிமையாளராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், தமிழக அணி கேப்டனாக அஜய்தாகூரும் உள்ளனர்.
தமிழ் தலைவாஸ் அணியை பிரபலப்படுத்தும் வண்ணம் அந்த அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர் உள்ளூர் அணியுடன் இணைந்து கபடி விளையாடியும் வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்தலைவாஸ் அணி நேற்று மதுரை வந்தது. அந்த அணி நேற்று மாலை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் மதுரை அணியுடன் மோதி விளையாடியது.
முன்னதாக அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புரோ கபடியின் முந்தைய சீசன்களில் 8 அணிகள் மட்டுமே விளையாடின. இதில் தமிழக அணி இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன் அடிப்படையில் தமிழகம், குஜராத், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 4 புதிய அணிகள் இந்த முறை இணைக்கப்பட்டுள்ளன.
தமிழக அணியை பிரபலப்படுத்தும் வண்ணம் முக்கிய ஊர்களில் உள்ளூர் அணியுடன் இணைந்து கண்காட்சி கபடி போட்டியை விளையாடி வருகிறோம். நமது அணியில் இந்தியாவில் உள்ள தலை சிறந்த வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அணியின் கேட்பன் அஜய்தாகூர் கடந்தாண்டு புனே அணியில் விளையாடியவர். நமது அணியில் தமிழகத்தை சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நமது அணிக்கு சிறந்த பெயர் வைக்க வேண்டும் என்று அணியின் உரிமையாளர் தெண்டுல்கர் விரும்பினார். தமிழக மக்கள் நெருங்கிய நண்பர்களை கூப்பிடும் போது தலைவா என்று அழைக்கும் பழக்கம் உள்ளது. இது இளைஞர்களை கவரும் என்று சச்சின் விரும்பியதால் தமிழக அணிக்கு தமிழ் தலைவாஸ் என்று பெயர் சூட்டியுள்ளோம். தமிழ்தலைவாஸ் அணியின் ஒரு சில ஆட்டங்களை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூலை மாதம் இறுதியில் புரோ கபடி தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரைக்கு வந்த தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார்
வாழ்த்து தெரிவித்தார். அருகில் பயிற்சியாளர் பாஸ்கரன், அமெச்சூர் கபடி கழக
தலைவர் சோலை ராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்ளனர்.
தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய்தாகூர் கூறியதாவது:-
கபடி என்பது தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு. அதில் தமிழக அணியில் விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். நான் இந்திய கபடி அணியில் விளையாடி இருப்பதால் அனைத்து மாநில விளையாட்டு வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு தெரியும்.