புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 4-வது தோல்வி

புரோ கபடி லீக் திருவிழாவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 4-வது தோல்வி
Published on

மும்பை:

புரோ கபடி லீக் திருவிழாவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோத வேண்டும்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 4-1, 8-4 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் அணி அதன் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அபாரமாக செயல்பட்ட பாட்னா அணி தொடர்ந்து 10 புள்ளிகளை குவித்ததுடன் தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் பாட்னா பைரட்ஸ் அணி 16-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

பின் பாதியிலும் பாட்னா பைரட்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. அந்த அணி மீண்டும் ஒரு முறை தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தது. முடிவில் பாட்னா பைரட்ஸ் அணி 35-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. ஒரு ஆட்டத்தில் தோல்வியும், 2 ஆட்டத்தில் டையும் கண்டு இருந்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் வெற்றியும், 2 ஆட்டத்தில் டையும் கண்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), யு மும்பை-தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com