

புதுச்சேரி:
கடலூர் காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அங்கப்பன். இவரது மகன் அபிலன் (வயது 19). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்திருந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக புதுவை இந்திரா காந்தி சிலை அருகே விரைவில் திறக்கப்பட உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார்.
வழக்கம் போல் இன்று காலை அபிலன் ஜவுளி நிறுவனத்தில் எலக்ட்ரிசியன் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
இதில், தூக்கி வீசப்பட்ட அபிலன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அங்குள்ளவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.
இந்த நிலையில் அபிலன் இறந்து போனதை அறிந்த உறவினர்கள் மற்றும் அபிலனுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆவேசம் அடைந்தனர்.
மின்சாரம் தாக்கி அபிலன் காயம் அடைந்து உயிருக்கு போராடிய போது அவரது உயிரை காப்பாற்ற ஜவுளி கடை உரிமையாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மங்கலம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுபதி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதனை ஏற்காததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.