விபத்து
செய்திகள்
காரைக்குடி அருகே விபத்து - கணவன் கண்முன்பு மனைவி பலி
காரைக்குடி அருகே தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பஸ் டயரில் சிக்கி கணவன் கண்முன்பு மனைவி உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 35). இவரது மனைவி ரேவதி (30). 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
காரைக்குடியில் உள்ள ரெயில்வே ஜி.ஹெச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டார். அவர் முன் ரேவதி பஸ் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

