சென்னையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி உயர்ந்தது

சென்னையில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் இனி கல்வி கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி உயர்ந்தது
Published on

சென்னை:

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரையில் விதி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. வீடு, கடைகளுக்கு வசூலிக்கப்படும் அளவு போல கல்வி நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படுவதில்லை.

ஆனால் இப்போது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்தது.

தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கி வந்த விதி விலக்கை ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது சென்னை மாநகராட்சி நேற்று சொத்து வரியை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அளித்து வந்த சலுகையை ரத்து செய்து விட்டு கூடுதலாக வரியை விதித்துள்ளது.

சென்னை நகர முனிசிபில் கார்ப்பரே‌ஷன் விதி 1919ஐ தமிழக அரசு ரத்து செய்ததன் மூலம் இதுவரையில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அளித்து வந்த விதி விலக்கு நீக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மற்றும் கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்தது.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு, வீடுகளுக்கு ஏற்கனவே உள்ள ‘சிலாப்’படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரி வசூலிக்கப்படும். அதாவது தற்போதுள்ள சொத்து வரியுடன் 60 சதவிகித ‘சர் ஜார்ஜ்’ கூடுதலாக சேர்த்து வசூலிப்பதற்கு மாநகராட்சி முடிவு செய்து அறிவித்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் இனி கல்வி கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்து வரும் நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் மேலும் கல்வி கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரியில் அளிக்கப்பட்டு வந்த விலக்கு ரத்து செய்யப்பட்டதால் மிகப்பெரிய அளவில் வருவாய் உயரும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com