

விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள நீலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் மின் வாரிய அலுவலகத்தில் இளமின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் தமிழ்செல்வன் என்ற பாலாஜி (வயது 24).
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் படித்து வந்தார்.
அப்போது பாலாஜிக்கும் அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர்.
இதையடுத்து பாலாஜி இறுதி ஆண்டு படிப்பை முடித்து விட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட பொறியாளராக பணியில் சேர்ந்தார். அவரது காதலி என்ஜினீயரிங் படித்து விட்டு எம்.டெக் படித்து வந்தார். அப்போதும் இருவரும் காதல் தொடர்ந்து நீடித்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாஜி அந்த மாணவியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலாஜி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தனது காதலிக்கு கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் மாணவி மயக்கமடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது செல்போனில் வீடியோவும் பதிவு செய்தார். இந்த வீடியோவை தனது காதலியிடம் காட்டி பலமுறை அவரை பலாத்காரம் செய்துவந்துள்ளார்.
மேலும் இந்த தகவலை வெளியில் சொன்னால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.
இதற்கிடையே அந்த மாணவிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்த விபரம் பாலாஜிக்கு தெரிய வந்தது. அவர் ஆத்திரமடைந்தார். தனது காதலி தன்னை காதலித்து விட்ட வேறு ஒருவரை கைபிடிப்பதா? என அவர் ஆவேசமடைந்தார். மேலும் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தவும் முடிவு செய்தார்.
பாலாஜியும், மாணவியும் இணைந்திருக்கும் போட்டோவை சமூக வலைதளங்களிலும், பேஸ்-புக்கிலும் பாலாஜி வெளியிட்டார். மேலும் பாலாஜியும், அவரது தந்தை சங்கரும், மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரை ஆசிட் ஊற்றி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோர் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி பாலாஜி மீது 249, 249-பி, 354-ஏ, 366, 354-டி, 376-என் உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். அவரது தந்தை சங்கர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
பாலாஜி இதேபோல் மேலும் பல பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.