மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

கொல்லங்கோடு அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

நாகர்கோவில்:

ஒடிசா மாநிலம் பஞ்ச நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபட்டி. இவரது மகன் நீல கண்டன்(வயது16). கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் கொல்லங்கோட்டில் இருந்து களியக்காவிளை சென்று கொண்டிருந்தார். சூழால் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்ட நீலகண்டன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலை அடுத்த தம்மத்துகோணம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65). இவர் வீட்டில் இருந்து தம்மத்துக்கோணம் பஜாருக்கு நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செல்வராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுசீந்திரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஆவுடையம்மாள்(80). இவர் குளச்சல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து நடந்து வந்த போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த ஆவுடையம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com