

பெரம்பூர்:
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). கோவையில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த மணிகண்டன், கோவை கோர்ட்டு உத்தரவின்பேரில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 2-ந்தேதி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 5-வது மாடியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக போலீசாரிடம் கூறினார். அவரை கழிவறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே காவலுக்கு போலீசார் நின்று கொண்டிருந்தனர். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த போலீசார், கதவை தட்டினர்.
அப்போது கழிவறை ஜன்னல் வழியாக கைதி மணிகண்டன், கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கட்டிடத்தின் அருகில் உள்ள மரத்தின் கிளைகளில் விழுந்து கீழே இருந்த மண் குவியலில் வந்து விழுந்ததால் கை, கால் முறிவுடன் கைதி மணிகண்டன் உயிர் தப்பினார். உடனடியாக அவரை சிகிச்சைக்கு அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.