சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகள்: தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்

சென்னையில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில், சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.
சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகள்: தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்
Published on

இந்தியாவின் நம்பர்-1 தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ கடந்த 1942-ம் ஆண்டு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரால் தொடங்கப்பட்டது.

75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ‘தினத்தந்தி’ தற்போது தனது பவள விழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

பவள விழாவின் சிகரமாக இன்று (திங்கட்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கோலாகல விழா நடைபெற்றது. இதற்காக மண்டப அரங்கில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

விழா மேடை ‘தினத்தந்தி’ பத்திரிகை மாதிரியை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காவடியாட்டம், கரகாட்டம், பம்பையாட்டம், தப்பாட்டம், துடும்பாட்டம், ஒயிலாட்டம், காளியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கொம்பாட்டம் நடந்தன.

பவள விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போர் நினைவுச்சின்னம் அருகே உள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு காரில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு புறப்பட்டார்.

10.30 மணிக்கு பிரதமரின் கார் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கை அடைந்தது. அங்கு பிரதமர் மோடியை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் சிவப்பு நிற ரோஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.

விழா அரங்கில் தினத்தந்தி படக்கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த படக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்த நிகழ்வுகளை பிரதமர் மோடிக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் விளக்கி கூறினார்.

தமிழ்நாட்டில் எந்தெந்த நகரங்களில் இருந்து தினத்தந்தி அச்சாகி வெளி வருகிறது என்ற படத்தையும் பிரதமர் மோடிக்கு சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன் காண்பித்தார்.

10.30 மணிக்கு பிரதமர் மோடி மேடைக்கு வந்தார். அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி கைகூப்பி வணங்கி இருக்கையில் அமர்ந்தார்.

இதையடுத்து ‘தினத்தந்தி’ பவள விழா தொடங்கியது. விழா மேடையில் பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அமர்ந்து இருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பிறகு பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

அதன் பிறகு சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்று பேசினார். அவரை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை நிகழ்த்தினார்.

இதையடுத்து 10.55 மணிக்கு ‘தினத்தந்தி’ பவள விழா சிறப்பு மலரை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அதை பெற்றுக் கொண்டார். பிறகு மேடை யில் இருந்தவர்களுக்கு பவள விழா மலரை சி.பால சுப்பிரமணியன் ஆதித்தனும், பா.சிவந்தி ஆதித்தனும் வழங்கினார்கள்.

அதன்பின்னர் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனுக்கு மோடி வழங்கினார்.

சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு ‘இலக்கியத் தின் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கு வழங்கப்பட்டது.

‘தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து தொழில் அதிபராக உயர்ந்தமைக்காக வி.ஜி.பி. குழும தலைவர் செவாலியர் வி.ஜி.சந்தோசத்துக்கு சாதனையாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி பாராட்டினார். இதையடுத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

11.30 மணிக்கு பிரதமர் மோடி தனது பேச்சை நிறைவு செய்தார். பிறகு அவர் கீழே இறங்கி வந்து முன்வரிசையில் அமர்ந்து இருந்தவர்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com