திருச்சி பெண்ணிடம் ரூ.47½ லட்சம் மோசடி - சாமியார் உள்பட 4 பேர் கைது

திருச்சி அருகே பெண்ணிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்த சாமியார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாமியார் வைஷ்னுதேவன், ஜெகதீஷ்ராவ், தமிழ்மதி, குமரன்.
கைது செய்யப்பட்ட சாமியார் வைஷ்னுதேவன், ஜெகதீஷ்ராவ், தமிழ்மதி, குமரன்.
Published on

திருச்சி:

திருச்சி வாசன்நகரை சேர்ந்தவர் திவ்யராஜன். இவரது மகள் நித்யா(வயது 47). இவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தனது 2 மகள்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நித்யாவுக்கு திருச்சி சோமரசம்பேட்டை கோனார்சத்திரத்தை சேர்ந்த தமிழ்மதி என்கிற முத்துகிருஷ்ணன் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ரெட்டைவாய்க்கால் வாசன்நகரை சேர்ந்த வைஷ்னுதேவன் என்கிற ரிஷியோகி அறிமுகமானார். அவர் சிவன்ராஜயோகம் என்ற பெயரில் ஆன்மிக அமைப்பை நடத்தி அங்கு சாமியாராக இருந்து வருகிறார். அந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் தமிழ்மதி இருந்து வந்தார்.

அவர்களிடம் நித்யா, தனது குடும்ப கஷ்டங்களை கூறவே, அவர்கள் பிரச்சினைகள் தீர வேண்டுமானால் ஹரித்துவாரில் நடைபெறும் யாகத்தில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் செலவாகும் என்றும் வைஷ்னு தேவன் கூறினார்.

அதை நம்பிய நித்யா, அவரது தந்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையில் இருந்து ரூ.6 லட்சத்தை எடுத்து கொடுத்துள்ளார். அதில் ரூ.3 லட்சத்தை யாக பணிகளுக்காக ஹரித்துவாருக்கு அனுப்புவதாகவும், மீதமுள்ள ரூ.3 லட்சத்தை தொழிலில் முதலீடு செய்வதாகவும் நித்யாவிடம் கூறியுள்ளனர். அதன்மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நித்யாவின் தந்தை இறந்து விடவே, தந்தையின் சொத்துகளை ஒவ்வொன்றாக விற்று, அந்த பணத்தை முதலீட்டில் போட்டால் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன் அளிக்கும் என்றும், இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் நித்யாவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பி கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் தந்தையின் சொத்துக்களை விற்று நித்யா பணத்தை கொடுத்துள்ளார். அதனை சாமியார் வைஷ்னுதேவன் அவரது கூட்டாளிகளான பொன்மலை ஆயில்மில்ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ்ராவ், வாசன்நகரை சேர்ந்த குமரன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் மூலம் பெற்று, அவரது கைக்கு கிடைக்குமாறு செய்து கொண்டார்.

சொத்துகள் முழுவதையும் விற்று, சுமார் ரூ.47½ லட்சம் வரை அவர்களிடம் நித்யா கொடுத்துவிட்டார். பின்னர் அதற்கான ஒப்பந்தம் எழுதி கேட்டபோது, வைஷ்னுதேவன் உள்பட 5 பேரும் மிரட்டினராம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நித்யா புகார் செய்தார்.

இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நித்யாவிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சாமியார் வைஷ்னுதேவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சாமியார் வைஷ்னுதேவன் மற்றும் தமிழ்மதி, ஜெகதீஷ்ராவ், குமரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான ராஜபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com