

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியை சேர்ந்தவர் சாமியார் கங்கேசானந்தா (வயது 54). இவர் பக்தர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பூஜைகள் செய்து அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்.
திருவனந்தபுரம் பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக அவர்களது வீட்டிற்கு சென்ற கங்கேசானந்தா அங்கேயே தங்கியிருந்து பூஜைகள் செய்து வந்தார்.
அப்போது அந்த பெண்ணிற்கும் சாமியாருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணின் மகளான சட்டக்கல்லூரி மாணவிக்கும் அவர் கங்கேசானந்தா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கு திருவனந்தபுரம் வஞ்சியூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாரின் பிறப்புறுப்பை தான் அறுக்கவில்லை என்றும், தனது காதலரும் அவரது நண்பர்களும் சேர்ந்து தான் இந்த செயலில் ஈடுபட்டனர் என்று அந்த மாணவி திடீர் பல்டி அடித்துள்ளார். மேலும் தன்னை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த மாணவி தனது வாக்குமூலத்தை ஒரு கடிதமாக எழுதி பேட்டை போலீசில் அளித்துள்ளார். போலீசார் அந்த கடிதத்தை வஞ்சியூர் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். அந்த கடிதத்தில் மாணவி கூறியிருப்பதாவது:-
சாமியார் கங்கேசானந்தா பல ஆண்டுகளாக எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார். அவர் என்னை பாலியல் ரீதியாக எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை. எனது காதலன் அய்யப்பதாசிற்கும், சாமியாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர் என்னிடம் கத்தியை கொடுத்து சாமியாரின் பிறப்புறுப்பை துண்டிக்கும்படி கூறினார்.
ஆனால் நான் பயந்துபோய் அப்படி செய்யவில்லை. உடனே அய்யப்பனும், அவரது நண்பர்கள் மனு மற்றும் அஜீத்குமார் ஆகியோர் சேர்ந்துதான் சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்தனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.