

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 17-ந்தேதி நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் புதன் கிழமை தொடங்கியது. 28-ந் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை மிக எளிதாக தேர்வு செய்யும் நிலையில் ஆளும் பா.ஜ.க. உள்ளது. ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க பா.ஜ.க. கூட்டணிக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகளே தேவைப்படும் நிலையில் மாநில கட்சிகளான அ.தி.மு.க., ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதால், அந்த கூட்டணிக்கு சாதகமாக உள்ளன.
இதனால் பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் 17 கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளர் யார் என்பதை தெரிந்து கொண்ட பிறகு தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படுத்தவும், தங்களுக்கு ஆதரவு திரட்டவும் பா.ஜ.க.வில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய 3 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட அனைவரிடமும் பேச்சு நடத்தினார்கள்.
மாநில கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த ஆலோசனைகள் அனைத்தும் நேற்றுடன் முடிந்தது.
இதையடுத்து பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதோடு ஜனாதிபதி வேட்பாளரை முன்மொழியவும், வழி மொழியவும் உள்ள எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறுவதற்கான நடைமுறைகள் நடைபெற உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவருக்கு 50 எம்.பி.க்கள் முன் மொழியவும், 50 மக்கள் பிரதிநிதிகள் வழிமொழியவும் வேண்டும். இவை அனைத்தும் நாளை மதியத்துக்குள் முடிக்கப்பட உள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க.வின் பாராளுமன்றக் குழு கூட்டமும் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
நாளை பிற்பகல் பிரதமர் மோடி லக்னோ செல்ல உள்ளார். அங்கு 21-ந்தேதி சர்வதேச யோகா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
அவர் டெல்லியில் இருந்து புறப்படும் முன்பு ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது உறுதி செய்யப்பட்டு விடும். எனவே பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது நாளையே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை நாளை அறிவிக்கப்படாவிட்டால் புதன்கிழமை நிச்சயம் அறிவிக்கப்பட்டு விடும் என்று பா.ஜ.க. வட்டார தகவல்கள் தெரிவித்தன.
22-ந்தேதி பா.ஜ.க. வேட்பாளர் தனது மனுவை தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவார். அவரை முன் மொழியும் கூட்டணி கட்சி தலைவர்களிடமும் உரிய படிவங்களில் கையெழுத்து பெறுவார்.
23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜ.க. வேட்பாளர் தன் வேட்புமனுவை தாக்கல் செய்வார். பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு 24-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
எனவே அவர் வெளிநாட்டுக்கு புறப்படும் முன்பு பா.ஜ.க. வேட்பாளர் 23-ந்தேதி வேட்புமனுவை தாக்கல் செய்வது உறுதியாகியுள்ளது.
பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் மீது திருப்தி ஏற்படாவிட்டால் போட்டி வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரசும் வேட்பாளரை நிறுத்துமா? என்பது 21 அல்லது 22-ந்தேதி தெரிந்து விடும்.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக செய்யத் தொடங்கியுள்ளனர்.