

ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சியின் மூலம் அதிபர் ராபர்ட் முகாபே(94) பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இடைக்கால அதிபராக எம்மெர்சன் நாங்காவா பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவியில் அமர்த்துவது தொடர்பாக தெற்காப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் ஜிம்பாப்வே தற்காலிக அதிபர் எம்மெர்சன் நேற்றிரவு தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கு வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறும் என அவர் இன்று அறிவித்துள்ளார். இந்த தேர்தல் வன்முறை சம்பவங்கள் இல்லாமல் நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடத்தப்படும். முகாபே ஆட்சிக்காலத்தில் நடந்தது போலன்றி, எதிர்வரும் தேர்தலை கண்காணிக்க மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதுதொடர்பாக, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எம்மெர்சன் நாங்காவா தெரிவித்துள்ளார். #tamilnews #Zimbabwepresident #election