

திருவனந்தபுரம்:
பிரபல ஆன்மீகவாதி மாதா அமிர்தானந்தமயியின் 64-வது பிறந்தநாள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவிதா கோவிந்துடன், நேற்று காலை கேரளா வந்தார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில், கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஹெலிகாப்டர் மூலம், மாதாவின் சொந்த ஊரான வள்ளிக்காவு பகுதியில் உள்ள அமிர்தாபுரி ஆசிரமத்திற்கு சென்றனர். அங்கு அவர் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளையின் சார்பில் ரூ.100 கோடி செலவில் நாடு முழுவதிலும் கிராமபுறங்களில் தூய்மையான குடிநீரை பெறும் வகையில் ‘ஜீவாமிர்தம்’ எனப்படும் தண்ணீரை சுத்திகரிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.