சங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன் கோவில் ஏ.வி.ஆர்.எம்.வி. காலணியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துமாரி(வயது 22). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. முனியசாமி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். முத்துமாரி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் முனியசாமி கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்துமாரி மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கி தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து கடந்த 3 மாதங்களாக கடன் தவணை தொகையை முத்துமாரி கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த முத்துமாரி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் சீலிங்கில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் முத்துமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து முத்துமாரியின் தந்தை முருகேசன் அளித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 6 வருடமே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com