

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், குமாரபுரம், நெல்லை மாவட்டம் பழவூர், ஆவரைகுளம், ராதாபுரம், பணகுடி மற்றும் கயத்தாறு, தென்காசி, சுரண்டை ஆகிய இடங்களிலும் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
நெல்லை, குமரி மாவட்ட பகுதிகளில் மட்டும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைத்து வருகிறது.
ஒரு மெகாவாட், 1.650 மெகாவாட், 2.10 மெகாவாட், 225 மெகாவாட், 250 மெகாவாட், 500 மெகாவாட், 600 மெகாவாட், 750 மெகாவாட் போன்ற பல்வேறு திறன்கொண்ட மின் உற்பத்தி நடைபெறுகிறது.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் பலத்த காற்று வீசும் என்பதால் காற்றாலை மூலம் இந்த காலங்களில் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்தில் காற்றின் வேகம் அதிகமாக இல்லாததால் மின் உற்பத்தி குறைவாகவே நடைபெற்றது.
இதனால் 250 முதல் 1500 யூனிட் வரை தான் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக 3 ஆயிரம் யூனிட் வரை மின் உற்பத்தி நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தியும் 5 ஆயிரம் மெகாவாட் முதல் 10 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாகவே இருப்பதால் மின் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.
இது பற்றி காற்றாலை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, தற்போது ரூ.3.39-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை அரசு எங்களிடம் இருந்து வாங்குகிறது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்தபடி இருப்பதால் இந்த ஆண்டு மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்றார்.