

சென்னையில் கடந்த 5 மாதமாக கோழிக்கறி, முட்டை விலை அதிகமாக இருந்தது. 1 கிலோ கோழிக்கறி ரூ.260 வரை விற்கப்பட்டது. முட்டை ரூ.5.50 வரை விற்கப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக கோழிக்கறி, முட்டை விலை வீழ்ச்சி அடைந்து குறைந்து வருகிறது. கோழிக்கறி 1 கிலோ ரூ.160-க்கும் முட்டை ரூ.4.15-க்கும் விற்கப்படுகிறது.
இன்று ஆடி மாதம் இன்று பிறந்துள்ளதால் கோழிக்கறி விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மீன்பிடி தடை காலத்தில் கோழிக்கறி விலை உயரும். வெயில் காலங்களிலும் கோழிக்கறி விலை உயர்ந்து விடும். காரணம் வெயில் காலங்களில் நிறைய கோழிகள் இறந்து விடும். இதனால் உற்பத்தி கணிசமாக குறையும்.
இப்போது கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் கோழிக்கறி, முட்டை விலை குறைந்து வருகிறது.
இந்த மாதம் ஆடி என்பதால் கோழிக்கறி விலை மேலும் வீழ்ச்சி அடையும். காரணம் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் கறி வாங்க பலர் முன் வரமாட்டார்கள். நிறைய வீடுகளில் விரதம் இருப்பார்கள். கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இதனால் அசைவ உணவுகளை பலர் தவிர்ப்பது உண்டு.
இப்போது மழை பெய்து வருவதால் கோழி உற்பத்தி அதிகமாகி லாரி லாரியாக கோழிகள் வருகிறது. இதை நாங்கள் இருப்பு வைக்க முடியாது. உடனுக்குடன் விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். அதனால் விலையை குறைத்து விற்பனை செய்கிறோம்.
½ கிலோ கறி வாங்கும் வாடிக்கையாளர்கள் இப்போது 1 கிலோ வரை கோழிக்கறி வாங்கிச் செல்கின்றனர். இதனால் வியாபாரம் நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.