

சென்னை:
கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதியினர் தங்களது குழந்தைகள் மதி ஆருண்யா (4), அக்ஷயா (1½) ஆகியோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தனர். இதனால் அந்த குடும்பத்தில் 4 பேருமே பலியாகிவிட்டனர்.
கந்து வட்டி கொடுமையால் பாதிப்புக்குள்ளான ஒரு இசக்கிமுத்து குடும்பம்தான் தீயில் கருகிய பின்னர் வெளி உலகுக்கு தெரிந்துள்ளது.
ஆனால் இன்னும் எத்தனையோ குடும்பத்தினர் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி அதில் இருந்து மீள முடியாமல் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவராக வெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கந்து வட்டி கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பலர் உயிருக்கு பயந்து அதுபற்றி புகார் அளிக்க தயங்கும் நிலைதான் காணப்படுகிறது. கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பவர்களின் பின்புலம் அப்படிப்பட்டது. எந்த சூழ்நிலையிலும் இரக்கம் காட்டாமல், வட்டி வசூலில் மட்டுமே கண்ணாக இருப்பவர்கள் அவர்கள்.
வட்டியை ஒழுங்காக கொடுக்காவிட்டால் கடன் வாங்கிய நபரை தூக்கி போட்டு மிதிக்கவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மனிதாபிமானமே இல்லாத மிருகம் போல கந்து வட்டி வசூலில் ஈடுபடும் பலர் அடாவடியில் ஈடுபடுவது உண்டு. இப்படி பயம் காட்டினால் மட்டுமே கந்து வட்டியை வசூலிக்க முடியும் என்பதே கந்து வட்டிகாரர்களின் வாதமாக உள்ளது.
இதுபோன்ற கந்து வட்டி கும்பலிடம் பணம் வாங்கியவர்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
இதனால் பல இடங்களில் கந்துவட்டி கும்பலுக்கு பயந்து பலர் ஊரை காலி செய்து விட்டு ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்று வெளியூர்களில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்கள் ஊர் பக்கமே திரும்புவதில்லை. ஊர் பக்கம் போனால் கந்து வட்டிக்காரர்கள் வந்து விடுவார்கள் என்கிற பீதியே இதற்கு காரணமாகும்.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிக்காரர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். வீட்டு பத்திரம், நில பத்திரம் மற்றும் நகை போன்றவற்றை அடமானமாக பெற்றுதான் இந்த கும்பல் கடன் கொடுக்கிறது.
சிறிய தொகையை கொடுத்து விட்டு நீங்கள் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து வீட்டு மதிப்பை விட அதிகமாகி விட்டது. வீட்டை தருகிறாயா? அல்லது பணத்தை கொடுக்கிறாயா? என்று மிரட்டு வார்கள். பின்பு கந்து வட்டி கும்பல் வலுக்கட்டாயமாக கடன் வாங்கியவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி சொந்தமாக்கி கொள்கிறது.
ஆலங்குளம் பகுதி கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கந்து வட்டி கும்பலுக்கு சொந்தமாகி உள்ளது. 2 பேர் தங்களது மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஊரை விட்டே வெளியேறி விட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறைவு. மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயத்திலும் உரிய லாபம் கிடைக்காததால் பலர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியிலும் கூலித் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் அதிகம்.
இதுபோன்றவர்கள் தங்கள் தேவைகளுக்கு கடன் வாங்கியே வாழ்க்கை நடத்த வேண்டியது உள்ளது. இதனால் மின்னல் வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வாரவட்டி என வட்டி வசூலிக்கிறார்கள்.
ஒருவர் ரூ.10,000 கடனாகப் பெற்றால் அவரிடம் முதலிலேயே ரூ.1,500ஐ பிடித்துக் கொண்டு ரூ.8,500 மட்டுமே வழங்கப்படும். அந்த பணத்தையும் அவர் நாள்தோறும் ரூ.100 என வழங்க முற்படும்போது அது மாதக்கணக்கில் இழுத்து ரூ.20,000த்தை தாண்டிவிடும்.
பொதுவாக கந்துவட்டிக்காரர்கள் மாலை வேளையில் சீட்டும், குறிப்பேடுமாக கிளம்பிவிடுகிறார்கள். பின்னர் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தொழிலாளிகளை வாட்டி வதைக்கின்றனர். தொடர்ந்து பணம் தர மறுக்கும் நபர்களிடம் குடும்பத்தை பற்றியெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.
ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்குறிச்சி, பூலாங்குளம் கிராமங்கள் கந்துவட்டி கொடுமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் கும்பல்ஒரு சில இடங்களில் அதிக வட்டி தராத பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
3 பேரின் உயிரை கந்து வட்டி குடித்த பின்னரே அதிகாரிகள் உஷார் ஆகி உள்ளனர். தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டுள்ள பலர் நிச்சயம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். இந்த நிம்மதி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.