

சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம்-1 பணிகள் நிறைவடைந்து சேவை நடைபெற்று வருகின்றன. அதனுடைய விரிவாக்க திட்டம் வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் வரை நடந்து வருகிறது. விரைவில் இந்த பணி முடிந்து சேவை தொடங்க உள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் வடசென்னையையும், தென் சென்னையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
மாதவரம்- சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- கோயம்பேடு பஸ் நிலையம், பூந்தமல்லி- கோடம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
118.9 கி.மீ. தூரம் உள்ள இந்த 2-வது திட்டம் பணிக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான மண் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டன.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே தொடங்க இருந்த மெட்ரோ ரெயில் திட்டம் தற்போது மாற்றப்பட்டு அதற்கு பதிலாக பூந்தமல்லி-கோடம்பாக்கம் வழித்தட திட்டத்தை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முற்றிலும் உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் இந்த திட்டத்தை முதலில் செயல்படுத்தினால் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதிக்கு தீர்வு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
போரூர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், சாலிகிராமம் வழியாக கோடம்பாக்கம் பவர் அவுஸ் வரை நிறை வேற்றப்படும் இந்த மெட்ரோ ரெயில் பணி அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த காரணத்தால் இந்த பகுதிக்கு முதலில் தொடங்க முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
12 கி.மீ. தூரம் உள்ள இந்த திட்டத்தை 5 வருடத்தில் முடித்து சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் முழுவதும் உயர்மட்ட பாதையில் அமைகிறது. பவுர் அவுஸ், சாலிகிராமம், ஆவிச்சி, பள்ளி, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் ஜங்ஷன், போரூர் ஜங்ஷன், சென்னை பைபாஸ் கிராசிங், ராமச்சந்திரா மருத்துவமனை, ஐய்யப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பஸ் முனையம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும் போது, இந்த திட்டத்தின் கீழ் 36 மாதத்தில் உயர்மட்ட பாதை கட்டமைக்கப்படும். இந்த திட்டப் பணிகள் 2 டெண்டர்களாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
போரூர்-பூந்தமல்லி ஒரு டெண்டரும், போரூர்-பவர் அவுஸ் மற்றொரு டெண்டர் வீதம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் விரைவாக இந்த பணியை செய்து முடிக்க முடியும் என்றார்.