ஜிப்மரில் சிகிச்சை பெறும் தாய்-மகளுக்கு பொன்முடி ஆறுதல்

திருக்கோவிலூர் அருகே மர்ம கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த தாய்-மகள் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பொன்முடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜிப்மரில் சிகிச்சை பெறும் தாய்-மகளுக்கு பொன்முடி ஆறுதல்
Published on

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வென்னம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆராயி. இவர் சம்பவத்தன்று இரவு தனது மகள் தனம் (வயது15) மகன் சமையன் (9) ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது நள்ளிரவில் ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து ஆராயி மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரை சரமாரியாக தாக்கியது. பின்னர் அந்த கும்பல் தாய்,-மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதனால் அவர்கள் அலறல் சத்தம் போட்டதால்அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த கொடூர தாக்குதலில் சமையான் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். ஆராயி மற்றும் அவரது மகள் தனம் ஆகியோர் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆராயி மற்றும் அவரது மகள் தனம் ஆகியோரை முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொன்முடி இன்று காலை சந்தித்து அங்கிருந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.அப்போது விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. ராதாமணி, புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வென்னம்புத்தூர் கிராமத்தில் இதுபோன்று ஏற்கனவே ஒரு சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

வென்னம்புத்தூர் கிராமத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com