டெல்லியில் ராகுல்காந்தியுடன் புதுவை அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த புதுவை அமைச்சர்கள் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப கோரிக்கை விடுத்தனர்.
டெல்லியில் ராகுல்காந்தியுடன் புதுவை அமைச்சர்கள் சந்திப்பு
Published on

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.

டெல்லியில் முகாமிட்டுள்ள அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தி கேட்டார். அதற்கு புதுவை அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் புதுவை கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடு, மத்திய அரசின் தன்னிச்சையான நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் ஆகியவை குறித்து ராகுல் காந்தியிடம் புகார் செய்தனர்.

அதோடு எம்.எல்.ஏ.க்கள் நியமனம் மூலம் மாநில உரிமையில் தலையிட்டுள்ளது குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பும்படி புதுவை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து ராகுல் காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத் ஆகியோரை தொடர்பு கொண்டு புதுவை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பும்படி கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் ஜனாதிபதி மாளிகை சென்றனர். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக மத்திய மந்திரிகள் நட்டா, அசோக் கஜபதிராஜ், தாவாசந்த் பெலாட் ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது புதுவைக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதியும், நிதியும் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com