

புதுச்சேரி:
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் என 3 அணியாக அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணைந்து பொதுக்குழுவை கூட்டினர்.
பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பொதுச்செயலாளர் சசிகலா நீக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழுவில் பங்கேற்க வருமாறு புதுவை அ.தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. பொதுக் குழுவில் மாநில செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட 34 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களும், கோகுல கிருஷ்ணன் எம்.பி. மற்றும் அவர்களது ஆதரவு நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை.
புதுவை எம்.எல்.ஏ.க்கள் யார் அணியில் உள்ளனர் என்பது கட்சி பிளவு பட்டதில் இருந்தே குழப்பமாக இருந்தது. நாளுக்கு ஒரு அணி என அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் என அடிக்கடி அணி தாவி வந்தனர்.
ஒரு பக்கம் தினகரனுக்கு ஆதரவு என கூறிக்கொண்டே மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி புதுவை வழியாக கடலூர் சென்ற போது அவரை வரவேற்றனர். புதுவை எம்.எல்.ஏ.க்கள் கண்ணா மூச்சி ஆட்டம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தங்கள் ஆதரவாளர்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர். பிரமாண பத்திரத்தில் பிற மாநில நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.
இதனால், புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலை பெற எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தூது அனுப்பினார். புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்குடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். தங்கள் அணியின் பொதுக்குழு முடிவை ஏற்றுக் கொண்டு கையெழுத்திடுமாறு வலியுறுத்தினார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களும் போன் மூலம் புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேசியுள்ளனர். இதனையடுத்து தினகரன் அணி, எடப்பாடி அணி அவ்வப்போது இடம் மாறி போக்கு காட்டி வந்த 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி அணியிடம் சரண் அடைந்தனர்.
பிரமாண பத்திரத்தில் 4 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டதோடு தங்கள் ஆதரவு நிர்வாகிகளிடமும் கையெழுத்து பெற்றுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) சென்னை சென்று பிரமாண பத்திரத்தை அளிக்கின்றனர்.
இதன் மூலம் புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் மாநில செயலாளர் புருஷோத்தமன், கோகுலகிருஷ்ணன் எம்.பி. மற்றும் அவர்கள் ஆதரவு நிர்வாகிகள் இதுவரை பிரமாண பத்திரத்தில் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.