பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்வு: பொன்.ராதாகிருஷ்ணன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்வு: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

பிரதமர் நரேந்திர மோடி ரூ.1000, ரூ.500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

கருப்பு பணத்தையும் தீவிரவாதிகளிடம் உள்ள பணத்தையும் ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அப்போது அவர் கூறினார். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இதைத் தொடர்ந்து இந்த நாளை கருப்பு பணம் ஒழிப்பு நாளாக பா.ஜனதா கட்சியினர் கொண்டாடினார்கள். இதையொட்டி நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சியினர் வெற்றி பேரணியும் பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்தினார்கள்.

நாகர்கோவில் நகர பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த இந்த வெற்றி பேரணி வடசேரி அண்ணா சிலை முன்பு தொடங்கி அண்ணா பஸ் நிலையம் வரை நடைபெற்றது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு வெற்றி பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் அவர் பா.ஜனதா கட்சி கொடியை கையில் ஏந்தியபடி அண்ணா சிலையில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார்.

அங்கு நேசமணி சிலை முன்பு பேரணியை முடித்து வைத்து அவர் பேசியதாவது:-

மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு ஆகிறது. இதன் மூலம் பாமர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், முதலாளிகளிடம் இருந்த பணம் இப்போது சாமானிய மக்களிடமும் புழங்க தொடங்கி உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.14 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளது. வரி கட்டுவோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அடித்தட்டு மக்களுக்கும் பயன் கிடைத்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியினர் இதனை துக்க நாளாக கடை பிடிக்கிறார்கள். ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால்தான் துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த நாளை துக்க நாளாக கடைபிடிக்கிறார்கள் என்றால் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தை இழந்ததால் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் திறமையான ஆட்சியாலும், திட்டங்களாலும் இந்தியா வளர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்தது. இப்போது 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்திற்கு வந்துள்ளது.

விரைவில் இந்தியா முதலிடம் பிடிக்கும். அதற்கு நாம் அனைவரும் பிரதமர் மோடியின் பின்னால் அணி வகுப்போம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com