பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி
Published on

தருமபுரி:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பூமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜீத். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் ரகுபதி (23) இவரும் விவசாயம் செய்து வந்தார்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பையர்நத்தம் கிராமத்தில் உள்ள இவர்களது உறவினர் வீட்டு கோவிலில் கிடா விருந்து நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் இருவரும் தருமபுரிக்கு வந்தனர். கிடா விருந்தை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இருவரும் திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது பையர்நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அஜீத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ரகுபதியை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக ரகுபதி இறந்தார். அவரது உடலை குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

இதை அறிந்த போலீசார் ரகுபதி வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com