நொய்யல் ஆற்றில் கெமிக்கல்கள் அதிகமாக கலந்திருந்தது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

நொய்யல் ஆற்றில் சோப்பு பொடிக்கு பயன்படுத்தும் கெமிக்கல்கள் அதிகமாக கலந்திருந்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் கெமிக்கல்கள் அதிகமாக கலந்திருந்தது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
Published on

நொய்யல் ஆற்றில் நுரை பொங்கியபடி வந்த தண்ணீர் கடந்த வாரம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆற்றில் சில இடங்களில் 10 அடி உயரத்துக்கு நுரை பறந்ததை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் தான் இந்த நுரைக்கு காரணம் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர்.

ஏற்கனவே நொய்யலாறு பாழாகி உள்ள நிலையில் சாயப்பட்டறைகளால் ஆறு மேலும் மாசுபடுவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அமைச்சர் கருப்பண்ணன் விளக்கமளித்தார். அப்போது கோவை மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சோப்பு மற்றும் கழிவுகளாலேயே நுரை வந்துள்ளது என கூறினார். அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சரின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலை தளங்களில் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் அமைச்சர் கருப்பண்ணனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கிண்டலாக பதிவுகளை தெரிவித்து பரப்பினர்.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைதொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நொய்யலாற்றில் நுரை வந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். குறிப்பாக கோவையில் இருந்து திருப்பூருக்கு நொய்யலாற்று தண்ணீர் செல்லும் ஆலங்காடு தடுப்பணையில் இருந்து நுரையுடன் வந்த தண்ணீரை சேகரித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு முடிவுகளில் நொய்யலாற்று தண்ணீர் சோப்பு பொடிக்கு பயன்படுத்தும் நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் ஆகிய கெமிக்கல்கள் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 23 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இவற்றில் இருந்து கழிவுகளை வெளியேற்றியதே நொய்யலாற்றில் உருவான நுரைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிய நிலையில் மாசுகட்டுப்பாடடு வாரிய ஆய்வில் நுரைக்கு சாயப்பட்டறை கழிவுகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சுற்றுசூழல் துறை திருப்பூர் வடக்கு பிரிவு என்ஜினீயர் இளங்குமரன் கூறியதாவது:-

ஆய்வு முடிவுகளில் சோப்பு பொடிகளில் பயன்படுத்தும் நைட்ரேட், பாஸ்பேட் போன்ற கெமிக்கல்கள் தான் அதிகமாக கலந்திருப்பது தெரியவந்துள்ளது. சாயப்பட்டறை கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆற்றில் கலந்திருந்தால் கழிவுகளின் தன்மை ஒரு லிட்டருக்கு 1000 மில்லி கிராம் அளவுக்கு மேல் இருந்திருக்கும். ஆனால் ஆய்வில் கழிவுகளின் தன்மை ஒரு லிட்டருக்கு 50 மில்லி கிராமை விட குறைவாகத் தான் இருந்தது. எனவே சாயப்பட்டறை கழிவுகள் காரணம் இல்லை.

அதேநேரம் சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறதா? என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் இருந்து நொய்யலாற்றில் திருப்பூருக்கு தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள இருகூர் தடுப்பணை மற்றும் நல்லம்மன் தடுப்பணை ஆகிய அணை பகுதிகளில் தான் நுரை அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது.

இங்கு தண்ணீரில் சோப்பு பொடிக்கு பயன்படுத்தும் கெமிக்கல்கள் அதிகமாக இருந்த நிலையில் தடுப்பணையில் இருந்து நீர்வெளியேறும் போது நுரை அதிக உயரத்துக்கு எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com