பொள்ளாச்சி பாலியல் வழக்கு - போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #PollachiCase #CBCID
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - போலீஸ் காவல் முடிந்து மணிவண்ணன் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்
Published on

கோவை:

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பாலியல் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் மாணவிகள், இளம்பெண்கள் புகார் தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது மணிவண்ணன் பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்படவில்லை. அந்த செல்போன் தொலைந்து விட்டதாக மணிவண்ணன் கூறி உள்ளார். அதில் மாணவிகள், இளம்பெண்கள் ஆபாச படம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் வாலிபர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களுக்கும் பாலியல் விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

3 நாட்கள் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை மணிவண்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். #PollachiCase #CBCID

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com