

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-
தமிழக அரசின் துணை முதல்-அமைச்சர் மற்றும் நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதோடு, எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கே.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக பதவி ஏற்றிருப்பதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் தத்தமது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு தமிழக மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒருகட்டமாக அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்திருக்கின்றன. அதன்பயனாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் அவர் உள்பட 2 பேர் அமைச்சர்களாகி உள்ளனர். இத்தனை நாட்களாக இரு குழுக்களும் எழுப்பிய அத்தனை சத்தங்களும் இதற் காகத்தான் என்பதை இணைப்பு விழா வைபவம் நிரூபித்திருக்கிறது. சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் இது.
இயற்கைக்கு எதிராக நடக்கும் எந்த வினையையும் இயற்கையே சரிசெய்யும். தமிழகத்தில் நடந்துள்ள கொள்ளைக்கான கூட்டணியையும் மண்ணை கவ்வ வைக்கும் வலிமை இயற்கைக்கும், மக்களுக்கும் உண்டு. வெகுவிரைவில் இயற்கையும், மக்களும் அவர்களின் வலிமையை நிரூபிப்பார்கள். அப்போது இருக்க வேண்டிய இடத்தில் அனைவரும் இருப்பார்கள். அப்போது புதியதோர் தமிழகம் அமையும்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி:-
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைப்பால் தமிழக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. இரு அணிகளை சேர்ந்தவர்கள் நலனுக்காக மட்டுமே இந்த இணைப்பு நடந்துள்ளது. இதில் அவர்களுக்கு தான் பயன் அதிகம். கண்டிப்பாக அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள்.
இந்த ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சி. மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் பயனுள்ள எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஆட்சி தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரிவினை மறந்து, இன்று மீண்டும் இணைந்திருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறேன். பிரிவு ஏற்பட்டதையும், மீண்டும் இணைந்ததையும் அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை மக்கள் அளித்தனர்.
அதனடிப்படையில், அந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டு காலமும் நிலைத்திருந்தால் தான் மக்களின் தீர்ப்பை மதிப்பதாக இருக்கும். அ.தி.மு.க.வின் கோடிக்கணக்கான தொண்டர்களின் ஏகோபித்த மகிழ்வோடும், மனநிம்மதியோடும் இன்று ஏற்பட்டிருக்கும் இணைப்பு, நூற்றாண்டு விழா காணும் எம்.ஜி.ஆரின் கனவுகளையும், ஜெயலலிதாவின் நல்லெண்ணங்களையும் நிறைவேற்றி தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லும் நல்லாட்சிக்கு பக்கபலமாக அமைய வேண்டும் என்ற எனது நம்பிக்கையையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஒன்றாகியுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தமிழக மக்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுக்கவும், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தி உடனடியாக அத்திட்டங்களுக் கான பணிகளைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக் கான அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்து கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை ஒரு காலக்கெடுவிற்குள் முடித்து நிறைவேற்றக் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.
ஒன்றுபட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு பலம் சேர்க்கிறது. எனவே மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளும் அரசு மாநில அளவில் ஆட்சி, அதிகாரத்தில் சிரத்தன்மையோடு செயல்பட்டு தமிழக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு வலுவாக குரல் கொடுத்து தமிழக நலன் காக்க வேண்டும்.