மக்களை சந்தித்து குறைகளைக் கேட்ட கமல்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நடிகர் கமல் ஹாசன் மக்கள் பிரச்சனைகளுக்காக நேரில் சென்று பார்வையிட்டதை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
மக்களை சந்தித்து குறைகளைக் கேட்ட கமல்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு
Published on

கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவித்த நடிகர் கமல் ஹாசன் இன்று எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களை சந்தித்து, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

மக்கள் பிரச்சினைகளுக்காக டுவிட்டரில் மட்டுமே இதுவரை தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல், முதல் முறையாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்துள்ளார். இதன்மூலம் தனது தீவிர அரசியல் பயணத்தை மீண்டும் உறுதி செய்துள்ளார் கமல்.

இதுகுறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

நடிகர் கமல் மக்கள் பணியாற்றுவதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை பார்வையிட்டதில் மகிழ்ச்சி என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும், தமிழகம் முழுவதும் கமல் பயணம் மேற்கொண்டு டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளை கமல் ஹாசன் பார்வையிட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம்  கேட்டபோது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் களத்தில் சென்று ஆய்வு நடத்தலாம் என்றார்.

மேலும், கொசஸ்தலை ஆற்றில் கழிவுகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர்,  சில வகை மீன்களுக்கு முகத்துவார பகுதிகள் மகப்பேறு மருத்துவமனைகளாக உள்ளன என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com