

சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இயக்கப்படும் 22,000 பேருந்துகளில் கிட்டத்தட்ட 70 சதவீத பேருந்துகள் காலாவதியானவை. இயக்குவதற்கு தகுதியற்ற பேருந்துகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் தான் உயிரை பணயம் வைத்து இயக்குகின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வை 22 சுற்று பேச்சுக்களுக்கு பிறகும் வழங்க அரசு மறுப்பதை ஏற்க முடியாது.
தமிழக அரசின் இப்பிடிவாதத்தால் பேருந்து வசதியில்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈபடுபட்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே தமிழக அரசு அடக்கு முறையை கையாளாமல் பேச்சு வார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைக்கு உட னடியாக தீர்வுகாண வேண்டும்.
போக்குவரத்து கழகங்களை முறையாக கண்காணிக்கவும், தொடர் நடவடிக்கைகளை எடுக்கவும் தவறிய அரசாக தமிழக அரசு கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்ததால் தான் நஷ்டத்தில் இயக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை இலாபத்தில் இயக்குவதற்கும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றுவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும் வரும் நிலையில் வேறு வழியின்றி அவர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தமிழக அரசே முழுக்காரணமாகும்.
தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சியைக் கைவிட்டு, பிரதானமான சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்:-
போக்குவரத்து துறை அமைச்சர், இனி பேச்சு வார்த்தை இல்லை என்றும், ஆளும் கட்சி சார்புடைய தொழிலாளர்களைக் கொண்டு பேருந்து இயக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது தொழிலாளர்களிடையே மோதலை உருவாக்கி தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய செயலாக இருக்கும், அமைச்சரின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது.
காலதாமதம் செய்யாமல் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேசி சுமுகத் தீர்வுகாண, முதலமைச்சர் நேரிடையாக தலையிட வேண்டும்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்-
சில தினங்களில் பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை வருவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் ஊர்களுக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் இப்போராட்டம் நிகழ்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பயணிகள் அவதிக்குள்ளாகாதவாறு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #TamilNews