வந்தவாசி அருகே பாலிஷ் போடுவதாக நகை பறித்த 2 வாலிபர்களுக்கு அடி-உதை

பாலிஷ் போடுவதாக நகை பறித்த 2 வாலிபர்களை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
வந்தவாசி அருகே பாலிஷ் போடுவதாக நகை பறித்த 2 வாலிபர்களுக்கு அடி-உதை
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்கொடுங்காலூரை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 65). ஓய்வுப்பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது வீட்டிற்கு நேற்று வாலிபர்கள் 2 பேர், நகை பாலிஷ் போடுவதாக கூறி வந்தனர்.

கோட்டீஸ்வரியும் தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை கழட்டி கொடுத்தார். அந்த நகைக்கு பாலிஷ் போடும் போது, வாலிபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டனர்.

சமையல் அறைக்கு சென்று கோட்டீஸ்வரி தண்ணீர் எடுத்து வருவதற்குள் 2 பவுன் நகையில் இருந்து ஒரு சிறிய பகுதியை துண்டித்து எடுத்துக் கொண்ட வாலிபர்கள், மீதமுள்ள நகையை இணைத்து பாலிஷ் போட்டு கொடுத்தனர்.

நகையை வாங்கி பார்த்த கோட்டீஸ்வரி எடை குறைவாக இருப்பதையறிந்தார். வாலிபர்களிடம் சத்தம் போட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, வாலிபர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

கோட்டீஸ்வரியின் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் திரண்டு வாலிபர்களை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு, கீழ்கொடுங்காலூர் போலீசில் வாலிபர்களை ஒப்படைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், பிடிபட்ட வாலிபர்கள் பீகாரை சேர்ந்த சீப்குமார் (22) மற்றும் சர்வன்ராம் (21) ஆகியோர் என்பதும், நகை பாலிஷ் போடுவதாக பல இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com