திருவள்ளூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் அமைக்க தற்காலிக உரிமம் கேட்டு ஏராளமானோர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் விண்ணப்பித்து வருகின்றனர்.

பட்டாசு கடைகள் அமைய உள்ள இடங்களை தீயணைப்பு துறை, மாவட்ட நிர்வாகம், போலீசார் என பல தரப்பில் ஆய்வு செய்து கடைகளுக்கு தற்காலிக உரிமம் வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த தற்காலிக உரிமம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே செல்லத்தக்கது. பிளாஸ்டிக் பைகளில் பட்டாசு வகைகளை வழங்க கூடாது.

பட்டாசு கடை நுழைவு வாயில் கதவுகள் வெளிப்பக்கம் திறக்கும்படி அமைக்க வேண்டும்.

நெருப்பு அபாயத்தின் பாதுகாப்புக்கு, போதுமான தண்ணீர் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்களின் உரிமம் உடனே ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி கூறியதாவது:-

இந்த மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டுள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சீன பட்டாசுகள் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனே குறிப்பிட்ட கடையின் தற்காலிக உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு, அந்த குறிப்பிட்ட நபருக்கு நிரந்தரமாக உரிமம் வழங்குவது தடை செய்யப்படும்.

பட்டாசு கடைகளில் அனுமதித்துள்ள அளவு பட்டாசுகளை மட்டுமே சேகரித்து வைத்து விற்பனை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கூடுதலாக பட்டாசுகளை இருப்பு வைத்திருக்க கூடாது. பட்டாசு விற்பனை செய்யும் போது, வேறு எந்த பொருள்களையும் விற்பனை செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பட்டாசு கடைகளில் மின் தடையின்போது மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள் பயன்படுத்தக் கூடாது.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் 101, 04427660299 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் மீட்புப் பணி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன’ என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com