மாணவன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை 2 மாதத்தில் தாக்கல் செய்யப்படும்- போலீஸ் சூப்பிரண்டு

திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூரில் தாய், மகளை தாக்கி மாணவனை கொலை செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை 2 மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
மாணவன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை 2 மாதத்தில் தாக்கல் செய்யப்படும்- போலீஸ் சூப்பிரண்டு
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளாம்புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 21-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த ஆராயி, அவரது மகள் தனம், 4-ம் வகுப்பு படித்து வந்த மகன் சமயன் ஆகியோரை வாலிபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக தாக்கினார்.

இதில் சமயன் அதே இடத்தில் உயிரிழந்தான். ஆராயி, தனம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அவர்களை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தசம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மேல்புவனகிரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தில்லைநாதனை (37) போலீசார் கைது செய்தனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த அவனது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்தார்கள்.

இந்தசம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளாம்புத்தூர் மாணவன் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள தில்லைநாதன் இதுவரை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் 81 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இவற்றில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கவில்லை. இதுசம்பந்தமாகவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தில்லைநாதன் வேறு எந்தெந்த மாவட்டங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக முழுமையான விசாரணை முடிவடைந்த பின்னர் 2 மாதத்திற்குள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க போலீசாருக்கு துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி தில்லைநாதனின் புகைப்படத்தை அடையாளம் காண்பித்து அவர் சம்பவம் நடந்த அன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் வெள்ளாம்புத்தூர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததாக 3 பேர் போலீசாரிடம் உறுதிபட கூறினர்.

இவர்கள் கூறிய தகவலின்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி தில்லைநாதனை மடக்கிப்பிடித்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண்பித்து போலீசாருக்கு உதவியாக செயல்பட்ட 3 பேரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு அரசு சார்பில் சன்மானமாக தலா ரூ.5 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கி பாராட்டினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com