நினைவிடமாக மாற்றம்: பாதுகாப்பு வளையத்தில் ஜெயலலிதா இல்லம்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் பணிகள் தொடங்கியதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நினைவிடமாக மாற்றம்: பாதுகாப்பு வளையத்தில் ஜெயலலிதா இல்லம்
Published on

சென்னை:

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த சென்னை போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் நேற்றே தொடங்கின.

மைலாப்பூர் தாசில்தார் சைலேந்தர் தலைமையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சியை சேர்ந்த 8 பேர் குழுவினர் நேற்று போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றனர். அங்கு அளவெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் போயஸ் கார்டனில் உள்ள இடத்தையும், வீட்டையும் அளவெடுத்து குறித்துக்கொண்டனர்.

பின்னர் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை வீட்டுக்குள் எந்தெந்த இடத்தில் வைப்பது, எந்த பொருட்களை காட்சிப் படுத்துவது, பொது மக்களை எந்த வழியாக அனுமதிப்பது, எந்த வழியாக வெளியேற வேண்டும் என்பது பற்றி ஆய்வு செய்து குறித்துக் கொண்டனர். சுமார் 2 மணிநேரம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது குறித்து அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்ப உள்ளனர்.

நினைவு இல்லமாக்கும் பணி தொடங்கியதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு முன்பு வேதா நிலையம், போயஸ் கார்டனில் உள்ள மாண்புமிகு அம்மாவின் வீடு, பொதுமக்களுக்கான நினைவு இல்லம் என்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் பணிகள் தொடங்கியதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா வசித்த போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அங்கு தனியார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தற்போது போயஸ் கார்டன் இல்லத்துக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போயஸ் கார்டனுக்கு நுழையும் ராதாகிருஷ்ணன் சாலையில் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டுக்கு செல்ல திரும்பும் வழியிலும் சற்று தள்ளியும், முன்வாசல் அருகிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா வீட்டின் பின்வாசலில் ஒரு அடுக்கும், கஸ்தூரி ரங்கன் சாலையில் 10 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் வீடு மெயின் கட்டிடமும், அதை ஒட்டி கூடுதலாக 5 கட்டிடங்களும் அமைந்துள்ளன. தனியாக 2 கட்டிடங்களும் உள்ளன. பாதுகாப்பு ஊழியர்களுக்காகவும் தனியாக கட்டிடம் உள்ளது.

10 கிரவுண்டு இடத்தில் ஜெயலலிதா வீடு அமைந்துள்ளது. இதில் கட்டிடங்கள் 21 ஆயிரத்து 662 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. கடந்த ஆண்டின் படி இதன் மதிப்பு ரூ 43 கோடியே 96 லட்சம் ஆகும்.

போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே அதை அரசுடமையாக்குவது தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பொது மக்களுக்காக எந்த இடத்தையும் அரசால் கையகப்படுத்த முடியும். அதற்கு அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். போயஸ் கார்டன் வீட்டுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபாவும், தீபக்கும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு என்னவோ அதை கொடுத்து சட்டரீதியான நடவடிக்கையின் மூலம் அதை கையகப்படுத்தலாம். இதற்கு முன்பு அப்படி நிலத்தை கையகப்படுத்தியதற்கான நடைமுறைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com