கைதான வாலிபர் பாட்டியையும் கொலை செய்தாரா? - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ் குமாரின் பாட்டியின் சாவிலும் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். #GirlHarassment
சந்தோஷ்குமார் - ரங்கம்மாள்
சந்தோஷ்குமார் - ரங்கம்மாள்
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார்(வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவருக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 1 மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். சந்தோஷ்குமாரின் பாட்டி வீடு துடியலூர் பகுதியில் சிறுமியின் வீடு அருகே உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாட்டியை சந்தோஷ் குமார் உடனிருந்து கவனித்துள்ளார்.

கடந்த 25-ந்தேதி வீட்டு முன்பு விளையாடிய சிறுமியை சந்தோஷ்குமார் தனது வீட்டுக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி அலறித் துடிக்கவே, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறுமி உடலை டி-சர்ட்டால் சுற்றி மறுநாள் அதிகாலையில் வீடு அருகே வீசிச் சென்றதாக வாக்குமூலத்தில் கூறினார்.

கைதான சந்தோஷ்குமாரை இன்று அதிகாலை கோவை மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். சந்தோஷ் குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக நேற்று இரவு சந்தோஷ்குமாரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

சந்தோஷ்குமார் சிறுமியை கொலை செய்த அன்று இரவு தான் அவரது பாட்டி ரங்கம்மாளும் இறந்துள்ளார். மரணப்படுக்கையில் கிடந்த பாட்டிக்கு சந்தோஷ் குமார், சிறுமியை சீரழித்தது தெரிந்திருக்கலாம். இதனால் அவர் யாரிடமாவது கூறி விடலாம் என கருதி சந்தோஷ் குமார் பயத்தில் தனது பாட்டியையும் கொலை செய்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவ்வழக்கில் ஒருவருக்கு மட்டும் தான் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் பல தகவல்களை பெறுவதற்காக சந்தோஷ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சந்தோஷ்குமார் ஏற்கனவே இரண்டு முறை சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். சம்பவத்தன்று மாலை சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தபோது சிறுமி இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடலை அப்புறப்படுத்துவதற்காக வெளியே வந்தபோது அங்கு மாயமான சிறுமியை அவரது குடும்பத்தினர் தேடுவதை பார்த்தார்.

அந்த நேரத்தில் உடலை வெளியே எடுத்துச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என கருதி, அவரும் சேர்ந்து சிறுமியை தேடுவது போல நாடகமாடி உள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று சிறுமி உடலை டி-சர்ட்டில் சுற்றி தனது துணிமணிகளுக்கு இடையே மறைத்துள்ளார்.

இந்த நேரத்தில் வீட்டில் மரணப்படுக்கையில் கிடந்த பாட்டியும் இறந்துள்ளார். பாட்டி இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வரை உறவினர்கள் பார்த்து சென்றுள்ளனர்.

தற்போது பாட்டி சாவிலும் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் சந்தோஷ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.  #GirlHarassment

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com