நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு

2018-ம் ஆண்டை வரவேற்கும் களிப்பில் சென்னை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முயல்பவர்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் பணியில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு
Published on

சென்னை:

புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறக்கவில்லை... அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் (இஸ்லாமிய நாடுகளை தவிர) மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷமாகப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். 

இதில், இந்தியாவும் விதிவிலக்கல்ல. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வருடத்தின் கடைசி நாளான 31-ந் தேதியின் மாலை வேளையிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிவிடும்.

வாண வேடிக்கைகள், பளிச்சிடும் மின்விளக்குகள், ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்கள் என்பதையும் தாண்டி, ‘டூவீலர்களின் சாகசங்கள் இருந்தால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது’ என்ற நிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து பெரு நகரங்களிலுமே இருக்கின்றன. 

தார்ச்சாலையில் நெருப்பு பறக்க... மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டுகளை உரசியவாறு, விண்ணைக் கிழிக்கும் சைலன்சர் சத்தத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வதை சாகசம் என அவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. மதுபோதையில் இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள், புத்தாண்டை குடும்பத்தோடு கொண்டாட வருபவர்களை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து விடுகின்றன.

தேவாலயங்களுக்கும், கோவிலுக்கும் செல்பவர்கள் கூட.... பயந்தபடியே சாலையை கடக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா, வாலாஜா, அண்ணா, பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை போன்ற சாலைகளில் மோட்டார்சைக்கிள், கார்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். இந்த சாலைகளில் பயணிப்பது மட்டுமல்ல..., கடப்பதும் கடினமான ஒன்றுதான். சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதேநிலை தான் நீடிக்கிறது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு பிறக்கும் வேளையில் இன்று நள்ளிரவில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நகரின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, சாந்தோம் நெடுஞ்சாலை. கிழக்கு கடற்கரை சாலையின் பெரும்பகுதி, நட்சத்திட விடுதிகள் உள்ள பகுதி மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நிறைந்த பகுதியில் பெண் போலீசார் உள்பட கூடுதலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் போலீசார் இன்றிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews #newyear2018 #policepatrol

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com