

புதுடெல்லி:
டெல்லியில் நேற்று இரவு சிவாஜி ஸ்டேடியம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடையில் 4 இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகவும், துப்பாக்கியால் கடையை நோக்கி சுடுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசாரை கண்ட அந்த கும்பல் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி மூன்று முறை சுட்டனர். அதன் பின் மர்ம கும்பல் தப்பியோட முயற்சி செய்த போது 4 பேரை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மீதி பேரை தேடி வருகிறோம். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தனர்.